Wednesday, June 4, 2014

நல்ல எண்ணத்தின் பெயரால் நடக்கும் வன்முறை

(2004 ஜூன் மாதம், காலச்சுவடு 54ஆம் இதழில் வெளியான கட்டுரை)

இந்தியாவிலுள்ள 100 கோடி மக்களுக்குக் குடிக்க நீரும் உண்ண உணவும் அத்தியாவசியம் என்பதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. இவற்றை எங்கிருந்து, எவ்வாறு அடைவதென்பதில்தான் ஏகப்பட்ட குழப்பங்கள். ஒருபுறம் ஜனாதிபதி அப்துல்கலாம் தலைமையில் அரசாங்கம், “நதிகளை இணைத்தால் மட்டுமே அனைவரின் தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியும்” என்கிறது. மறுபுறம் ராஜஸ்தானில் மழை நீர் சேகரித்துப் புரட்சி செய்திருக்கும் ராஜேந்திர சிங் போன்றோர் “மழை நீரைச் சேகரித்தால் மட்டுமே நம் நாடு வளம் பெறும்” என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்கள். இதுபோக, எம். எஸ். சுவாமிநாதன், எஸ். குருமூர்த்தி போன்றோர் “மழை நீர் சேகரிப்பு அவசியம். அதே சமயம், அரசாங்கத்தின் நதி இணைக்கும் திட்டத்தையும் ஆதரிக்க வேண்டும்” என்ற ரீதியில் குரல் கொடுக்கிறார்கள். இதில் எது சரி, எது தவறு? உண்மையை எவ்வாறு கண்டறிவது?

ஜனாதிபதி, பிரதமர் முதல் ரஜினிகாந்த்வரை பலராலும் போற்றப்படும் இந்த நதி நீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தக் குறைந்தது 5,60,000 கோடி ரூபாயாவது செலவாகுமாம். இவ்வளவு பணம் செலவழித்து நடத்தப்படும் இந்தத் திட்டம் உண்மையிலேயே பலனளிக்கக்கூடியதுதானா என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அதற்கு விடை காண 6 மாத காலம் தீவிரமான தேடலில் இறங்கினேன். கேள்விகளுக்கு விடை தேடும் முன் இரண்டு விஷயங்களில் எனக்குத் தெளிவு இருந்தது:

1. இன்று நீர் கிடைத்தால் போதும் என்ற வேகத்தில், நாளை நீர் கிடைக்காமல் செய்துவிடுவது புத்திசாலித்தனமான செயலல்ல.

2. நமக்கு நீர் கிடைத்தால் போதும் என்ற குறுகிய எண்ணத்தில் மற்றவர் எக்கேடு கெட்டுப்போனாலும் கவலை இல்லை என்பதும் முறையல்ல.

முதலில் நதி இணைப்புத் திட்டத்தைச் சிறிது அலசிப் பார்ப்போம். இது முற்றிலும் புதிய யோசனை அல்ல. 1974, 77ஆம் ஆண்டுகளில் கே. எல். ராவ், தஸ்துர் என்ற இருவர் இதேபோன்று வேறு திட்டங்களை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்தனர். அவை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ரீதியாகச் சரிவராததால் நிராகரிக்கப்பட்டன. இதன்பின் அரசாங்கம் நதி இணைப்பின் சாத்தியக் கூறுகளைத் தொடர்ந்து ஆராய்ந்தபின், “இது ஒரு சிக்கலான விஷயம். இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்த பிறகே எதுவும் கூற முடியும். எப்படி இருந்தாலும் திட்டத்தைச் செயல்படுத்தக் குறைந்தபட்சம் 43 வருடங்கள் ஆகக்கூடும்” என்று அதன் முடிவைக் கூறியது.

இது ஒருபுறமிருக்க, ஜனாதிபதி அப்துல் கலாமின் 2002ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் “நதிகளை இணைத்தால் மட்டுமே வெள்ளம் - வறட்சி பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்” என்று கூறியதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட வக்கீல் ரஞ்சித்குமார் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு, உயிரற்றுக் கிடந்த திட்டத்திற்கு உயிர்ப்பிச்சை அளித்தது.

நீர் உபரியாக உள்ள பள்ளத்தாக்கிலிருந்து பற்றாக் குறையாக உள்ள பள்ளத்தாக்கிற்கு, 37 நதிகளை 30 இணைப்புகள் மூலம் இணைத்து, நீரை எடுத்துச் செல்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். பல ஆயிரம் கி. மீ. நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் பல பெரிய, சிறிய அணைகளின் மூலம் இத்திட்டம்  நிறைவேற்றப்படுமாம். இம்மாபெரும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன் முறைப்படி மேற்கொள்ள வேண்டிய ஆழமான ஆராய்ச்சிகளை இன்னும் தொடங்கவே இல்லாத நிலையில், இரண்டு இணைப்புகளை 2004இல் தொடங்குவதாக அரசாங்கம் அறிவித்துவிட்டது. ஏன் இந்த அவசரம்?

இந்தத் திட்டத்தைப் புரிந்துகொள்ளும்முன், நதிகளைப் பற்றிச் சில முக்கியமான விஷயங்களை முதலில் புரிந்துகொள்வோம்.

1. நதி என்பது வெறும் நீர் பாயும் கால்வாய் மட்டும் அல்ல. அது மனிதனுடன், பல உயிரினங்களுடன் பின்னிச் சார்ந்த உயிருள்ள ஓரமைப்பு.

2. பலர் ‘வெள்ளம்’ என்றாலே அழிவு என்று தவறாக நினைக்கிறார்கள். வெள்ளம் என்பது இயற்கையில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்துவருகின்ற ஒரு நிகழ்வு. ஒவ்வொரு மழைக் காலத்திலும் நதிகள் தங்கள் வழியில் சேகரித்துக் கொண்டு தங்கள் இரு கரைகளிலும் சேர்த்துவிடும் செழிப்பான சேற்றுப்படிவுகளை நம்பியே மக்கள் விவசாயம் செய்துவந்திருக்கிறார்கள். வெள்ளம் வரும்போது மக்கள் பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கி, வற்றியவுடன் கரைக்குத் திரும்பி விவசாய வேலை பார்த்துவந்திருக்கிறார்கள். இயற்கையுடன் ஒத்துழைத்து, இயற்கை வளங்களைச் சார்ந்து வாழும் வழிமுறை இது. நதியையும் வெள்ளத்தையும் பற்றிய இந்த அடிப்படையான தகவல்களையடுத்து, சில விவரங்களைப் பார்ப்போம்.

நதிகள் இணைப்புத் திட்டம் இரு அனுமானங்களைக் கொண்டது: அனுமானம் 1. “வெள்ளம் ஏற்படும் நதிகளை நீர் மிகுந்த நதிகளாகவும் வறட்சி காணும் இடங்களில் ஓடும் நதிகளை நீர் குறைந்த நதிகளாகவும் பிரிக்கலாம்.” இது எந்த அளவுக்குச் சரி? மேகாலயாவில் சிரபுஞ்சி என்னும் இடம் உலகத் திலேயே அதிகமாக மழை பெறுவது அனை வருக்கும் தெரிந்த உண்மை. அதே சிரபுஞ்சியில் ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்?

இதேபோல், ஒவ்வொரு வருடமும் தொலைக்காட்சியில் ஒரிசாவில் வெள்ளத்தினால் ஏற்படும் அவலத்தைக் காண்கிறோம். அதே ஒரிசாவில் 12 மாவட்டங்கள் மழைக்காலத்தில் வெள்ளத்திற்கும் கோடைக்காலத்தில் வறட்சிக்கும் உட்படுவதை எத்தனை பேர் அறிவோம்? வெள்ளமோ வறட்சியோ நிரந்தரமாக ஓரிடத்தில் ஏற்படுவதில்லை. கடந்த நூற்றாண்டில் காடுகளை அழித்து நாமாக ஏற்படுத்திக் கொண்டுள்ள காட்டு வெள்ளங்களுக்கும் அதே காரணத்தினால் மழை நீர் சரியாக நிலத்தடிக்குச் சென்றடையாதலால் ஏற்படும் வறட்சிக்கும் இயற்கை பொறுப்பல்ல.

அனுமானம் 2: “நதியிலிருந்து கடலுக்கு வீணாகப் போய்ச்சேரும் நீரைத் திசை திருப்பிப் பயனளிக்கச் செய்யலாமே!” இதுவும் ஒரு புதிய யோசனையே அல்ல. இப்படி எண்ணித்தான் சோவியத் யூனியனில் இருந்த ஆரல் கடலில் பாய்ந்த அமு தார்ய, சிர் தார்ய என்ற இரு நதிகளை வறண்ட நிலங்களுக்குத் திசை திருப்பினார்கள். முதல் பத்து வருடங்களுக்கு அமோக விளைச்சல் உருவாகிப் பொருளாதாரம் பெருகியது. “ஆஹா, என்ன சாதனை!” என்ற பாராட்டு ஓய்வதற்குமுன் பிரச்சினைகள் தென்படத் தொடங்கின.

40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கடலின் பரப்பளவு பாதியாகச் சுருங்கியுள்ளது. நீரிலிருந்த காற்றின் மூலம் உப்பு ஆயிரக்கணக்கான கி. மீ. தூரம்வரை வீடு, விவசாய நிலங்களில் வந்து விழுகிறது. நிலத்தடி நீர் எதற்கும் பயன்படாத அளவிற்கு உப்புத்தன்மை அடைந்து விட்டது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இங்குதான் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் இறந்துபோகிறார்கள். 



இவை மட்டுமல்ல. நதிகள் கடலைச் சேருமிடங்களில் ‘கழிமுகங்கள்’ (estuaries) உருவாகின்றன. இவை மீன் போன்ற நீரினங்கள் தழைக்க மிகச் சிறந்த இடங்கள். இங்கு உப்பு நீர் அதிகரித்தால் தாவரங்களும் மீனினங்களும் பாதிக்கப்படும். ஆரல் கடல் பகுதியில் முக்கியமான மீன் வகைகள் 20இலிருந்து 4ஆகவும் மீன் பிடிப்பு (fish catch) ஒரு நாளைக்கு 40,000இலிருந்து 1000ஆகவும் குறைந்துள்ளது. சிந்து நதியில் கட்டப்பட்டுள்ள ஏராளமான அணைகளின் விளைவாக, நதி நீரின் அழுத்தம் குறைந்து, பல ஆயிரம் கிலோமீட்டர் ஆழத்திற்கு நிலத்தடிக்குள் உப்பு நீர் புகுந்துவிட்டது. இப்படிக் கெட்டுப்போன இயற்கை வளங்களை மீட்க முடியுமா?

இவ்வாறு தவறான அனுமானங்களை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படுகிறது நதிகள் இணைப்பு என்னும் அடுக்குமாடிக் கட்டடம். இது ஒரு புறமிருக்கட்டும்.

அரசாங்கம் இதன் மூலம் மக்களுக்கு என்ன பயன்களைத் தருவதாக வாக்களிக்கிறது என்பதைச் சற்றே ஆராய்ந்து பார்ப்போம்.

1. 3.5 மூன்றரை கோடி ஹெக்டேருக்கு நீர்ப்பாசனம் அளித்து, நம் நாட்டில் தலைவிரித்தாடும் பஞ்சத்தை அறவே ஒழிக்குமா?

நீர்ப்பாசனம் அதிகரித்தால் உணவு உற்பத்தி அதிகரிக்குமா? நம் நாட்டு நீர்ப்பாசனப் பயனுறுதி (efficiency) வெறும் 20 - 35 சதவீதம் மட்டுமே. ஆனால் நம் அரசாங்கம் நீர்ப்பாசன அளவைக் கணக்கிடும்போது 60 சதவீதம் பயனுறுதியில் கணக்கிடுகிறது. இதன்படி கணக்கிட்டுப் பார்த்தால் இத் திட்டத்தினால் 18 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே பயனடைய முடியும். மேலும், 9ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் இடைக்கால மறு சீராய்வின்படி 10 சதவீதம் பயனுறுதி அதிகரித்தாலே இன்னும் 14 மில்லியன் ஹெக்டேர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்யமுடியுமாம். இதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு பிரம்மாண்டமான புதிய திட்டம் எதற்கு? மேலும், நீர்ப்பாசனம் அதிகரித் தால் உணவுப் பயிருக்குப் பதிலாக, நீரை அதிகமாக உறிஞ்சும் பணப் பயிர்கள்தாம் அதிகமாகப் பயிராகின்றன. இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையில் அணைகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் 68 சதவீதம் பாசன நீர் வெறும் 3 சதவீதம் நிலத்தில் பயிராகியுள்ள (ஏற்றுமதிக்கான) கரும்புக்குச் செல்கிறது.



ராஜஸ்தான் கால்வாய் கட்டிய பிறகு வறண்ட நிலத்திற்கே உரிய கம்பு போன்ற பயிர்களை முற்றிலும் ஒழித்து அதிக அளவில் பஞ்சும் கரும்பும் பயிரிடப்பட்டன. இதற்கு மாறாக, இப்போது வளர்ந்து வரும் இயற்கை விவசாயத்தில் உபயோகிக்கும் பாரம்பரிய விதைகளுக்குக் குறைந்த நீரே போதுமானது. உப்பு (யூரியா) சேர்த்து விளைவிக்கும் கோதுமை, இயற்கை உரம் உபயோகித்து வளரும் பாரம்பரிய கோதுமையைவிட 5 மடங்கு நீரை அதிகமாக
உறிஞ்சுகிறது. வறண்ட நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் நிலத்தின்மேல் உப்புப் படிந்து, நிலம் கொடூரமான நிலைக்கு ஆளாகிறது. இந்நிலையை மாற்றுவதற்கான தொழில்நுட்பம் உலகில் எங்குமே இல்லை. நாடெங்கும் ஒரு கோடி ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலங்கள் உப்புப் படிந்த நிலங்களாக மாறியுள்ளன. மற்றும், நம் நாட்டில் ஏற்கனவே உள்ள பல அணைகளும் கால்வாய்களும் பராமரிப்பதற்குப் போதிய நிதி இல்லாத காரணத்தால் சீர்கெட்டுக்கிடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் நீர்ப்பாசனத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே போயினும், நீர்ப்பாசனம் பெறும் மொத்த நிலப் பரப்பளவு மட்டும் குறைந்துகொண்டே போவது எதனால் என்ற ஒரே ஒரு கேள்விக்குப் பதிலைத் தேடினால் அத்தனை வண்டவாளமும் வெளியாகும்.

2. வறட்சி மற்றும் வெள்ளத்தை இத்திட்டம் பெருமளவில் கட்டுப்படுத்துமா?

மிக நவீனமான தொழில்நுட்பத்தினால்கூடப் பிரம்ம புத்திராவிலும் கங்கையிலும் மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில் 5 சதவீத நீரை மட்டுமே திசைதிருப்ப முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்து, இது எப்படி வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

50 ஆண்டுக் காலம் அணைகள் கட்டியும், நம் நாட்டில் வெள்ளம் தாக்கும் நிலப் பரப்பளவு 2.4இலிருந்து 4 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்று தேசிய வெள்ள ஆணையம் கணித்துள்ளது. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல்,
காடுகள் அழிந்ததால் ஏற்படும் காட்டு வெள்ளத்தைக் கட்டுப்படுத்த மரங்களை வளர்க்காமல் மேலும் ஒரு லட்சம் ஹெக்டேர் காடுகளை அழிக்கிறது இத்திட்டம். நம் நாட்டில் வறட்சியினால் வாடும் இடங்களைப் பெரும்பாலும் உள்நாட்டுப் பகுதிகளில்தான் அதிகம் காணலாம். ஆனால் தென்னிந்தியாவில் பெரும்பான்மையான இணைப்புகள், கரை யோரமாகவே இருப்பதால், வறண்டு கிடக்கும் இடங்களுக்கு எவ்வளவு நீர் சென்றடையும் என்னும் கேள்வியைப் பலர் எழுப்பியுள்ளார்கள்.

3. வேலைவாய்ப்பை உண்டாக்குமா?

லட்சம் பொறியாளர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் வேலை கிடைக்கும் என்றே வைத்துக்கொள்வோம். எத்தனைபேருக்கு வேலை நிரந்தரம் என்று யாருக்குத் தெரியும்? உதாரணத்திற்கு ராஜஸ்தான் கால்வாய் இன்னும் கட்டி முடிக்கப்படவேயில்லை. அதற்குள் நிதிப் பற்றாக்குறையால் 165 பொறியாளர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். கழிமுகங்களையும்

டெல்டாக்களையும் நம்பியிருக்கும் விவசாயிகளும் மீனவர்களுமே பற்பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களின் பிழைப்பை இத்திட்டம் பறித்துவிடும். இப்படித்தான் சோவியத் ரஷ்யாவில் ஆரல் கடற்கரை வாழ் 90,000 மீனவர்கள் ஏழ்மைக்குத் தள்ளப்பட்டனர்.

வங்காள தேசத்தில் மட்டும் 30 லட்சம் மீனவர்கள் ‘ஹில்சா’ என்ற anadromous மீன் வகையை நம்பி உள்ளனர். இம்மீன் வகை நீரோட்டத்திற்கு எதிராகப் பல கிலோ மீட்டர் தூரம்வரை நீந்தி முட்டையிட்டுத் தன் இனத்தைப் பாதுகாத்து வருகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்தினால் ‘ஹில்சா’ இனம் முற்றிலும் அழிந்து இவர்கள் அனைவரின் பிழைப்பும் பறிபோய்விடும். இந்தியாவில் இதுவரையில்
இதுபோன்ற திட்டங்களினால் பாதிக்கப்பட்டு ஏழையாகியிருக்கும் மக்கள் 3 கோடிப் பேர். இதுபோன்ற திட்டங்கள் பெரிய கரும்பு விவசாயிகளும் சர்க்கரை ஆலை முதலாளிகளும் மேலும் பணக்காரர்களாகவும் சிறிய விவசாயிகளும் மீனவர்களும் மேலும் ஏழைகளாகவுமே துணைசெய்கின்றன.


இவையெல்லாவற்றையும்விட இத்திட்டத்தின் பொருளாதார விளைவுகள்தான் மிகப் பயங்கரமானவை. 5.6 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று முதலில் கூறிவிட்டு, பின் அதுவே பத்து லட்சம் கோடி ஆகக்கூடும் என்று வெகு சுலபமாகக் கூறிவிட்டது அரசாங்கம். நம் நாட்டில் கடந்த நூற்றாண்டில் செயற்படுத்தப்பட்ட இதே போன்ற 156 முக்கியமான பெரிய திட்டங்களின் செலவை ஆராய்ந்து பார்த்தால், முதலில் கணக்கிடப்பட்ட தொகையைவிடச் சராசரியாக ஆறு மடங்கு அதிகமாகச் செலவாகியுள்ளது. இதை ஆதாரமாக வைத்துப் பார்த்தால் இதைச் செயல்படுத்த அதிகபட்சம் ரூ. 60 லட்சம் கோடி ரூபாய் செலவாகலாம்!

இந்தியாவின் தற்போதைய கடன்தொகையைக் கட்டி முடிக்கவே நம் அரசாங்கத்தால் இயலாத நிலையில், இவ்வளவு பணத்தை யாரிடமிருந்து கடன் வாங்குவது? “தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும்” என்று அரசாங்கம் கூறுகிறது. இதுபோக, உலக வங்கியும் இந்தியாவில் பெரிய அணைகளுக்கு நிதியுதவி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இதன் விளைவு என்னவாக இருக்கும்? முதலில், நம் குழந்தைகள், பேரன் பேத்திகள், அவர்களின் குழந்தைகள் எனப் பல தலைமுறைகளுக்கு நாம் கடனை அடைத்துக் கொண்டிருப்போம். இதுபோக, கடன் சும்மா வராது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. 2003இல் சத்தீஸ்கர் மாநில அரசு அங்கு ஓடும் ஷிவனாத் நதியை 26 கி.மீ. தூரத்திற்கு ரேடியஸ் என்ற இந்தியத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்துகொடுத்தது. மறுநாள் காலை கிராம மக்கள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் நதிக்குச் சென்றபோது ஓர் அதிர்ச்சி காத்திருந்தது! ரேடியஸ் நிறுவனத்தின் காவலாளர்கள் துப்பாக்கியுடன் காத்திருந்து மக்களை அங்கிருந்து விரட்ட முயற்சித்தனர். காந்தியின் வழியில் சத்தியாகிரகம் செய்து நதியை மீட்டு வெற்றி கண்டனர் மக்கள். வெறும் 9 கோடி ரூபாய் வருட வருமானமுள்ள ஒரு நிறுவனமே இந்த ஆட்டம் போட்டால், பல லட்சம் கோடி ரூபாய் வருமானமுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நதிகள் இணைப்புத் திட்டத்தின் மூலம் இங்கு வந்து இறங்கினால், நம் நாட்டையே அவர்களுக்கு அடமானம் வைப்பதுபோல் ஆகிவிடும்!

பிறகு ராஜேந்திர சிங் கூறுவதுபோல் காந்தி நூல் நூற்கும் ராட்டினத்தைச் சின்னமாகக் கொண்டு ஆங்கிலேயர்களை விரட்டப் போராடியதுபோல், நாம் ஒரு பானையைச் சின்னமாகக்கொண்டு இரண்டாம் இந்திய விடுதலைக்காகப் போராட வேண்டி வரும்! இது வெறும் கற்பனை அல்ல. உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்ற ஒன்று. பொலிவியா நாட்டில் கொசமம்பா நகரத்தில் என்ன நடந்தது என்று பார்த்தால் இந்தப் பயங்கரம் இன்னும் நன்கு புலப்படும். இவ்வளவையும் தாண்டி இத்திட்டத்தைச் செயற்படுத்தினாலும்கூட அணைகளுக்கென்று ஓர் ஆயுள் உள்ளது. நம் நாட்டில் பல அணைகள் ஏற்கனவே சேற்றுப் படிவுகள் நிரம்பி ஆயுள் காலம் முடியும் நிலையில் உள்ளன.

பிறகு நம் தண்ணீர்ப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என்ற கேள்வி எழலாம். தீர்வை நான் கூறப் போவதில்லை. காட்டப்போகிறேன். இந்தியாவில்
 

 
ஆயிரக்கணக்கான கிராமங்கள் மழை நீர்ச் சேகரிப்பின் மூலம் செழிப்பாகியுள்ளன. ஆண்டிற்குச் சராசரி 450 மி.மீ. மழை பெய்யும் ராஜஸ்தானிலுள்ள அல்வர் என்ற மாவட்டம் முழுவதிலும் 1058 கிராமங்களில் நீர் வளம் பெருக்கிச் சாதனை படைத்துள்ளார் ராஜேந்திர சிங். வற்றிப்போன இரண்டு நதிகளை வற்றாத நதிகளாக ஓடவைத்து, வனங்களை உருவாக்கியுள்ளார். மூன்று வருடங்கள் மழை பெய்வது தவறியும் பயிர்செய்யும் அளவிற்குப் போதிய அளவு நீர் உள்ளது. 600 மி.மீ. மழை பெறும் குஜராத் மாநிலத்தில் ராஜ் சமாதியாலா கிராமத்தில் நிலத்தடி நீர் 250 மீட்டரிலிருந்து 15 மீட்டருக்கு உயர்ந்துள்ளது. ஒரு ஹெக்டேரிலிருந்து கிடைக்கும் வருமானம் ரூ. 4,600இலிருந்து, ரூ. 31,000ஆக உயர்ந்துள்ளது. 340 மி. மீ. மட்டுமே மழை பெய்யும் காந்தி கிராமத்தில் (குஜராத், கச் மாவட்டம்) குளங்களும் குட்டைகளும் நிரம்பி வழிகின்றன. 785 மி. மீ. மழை பெறும் மத்தியப் பிரதேசம், ஜாபுவா மாவட்டத்தில் பல கிராமங்களில் விளைச்சல் 5 - 6 மடங்கு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், ரலேகான் சித்தி என்ற கிராமத்தில் நீர்ப்பாசனம் 80 ஹெக்டேரிலிருந்து 1,200 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இங்கு மழையோ 300 மி.மீ. மட்டுமே.

இதுபோன்று இன்னும் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. சென்ற வருடம் நான் ராஜேந்திர சிங்குடன் தமிழ்நாட்டுக் கிராமங்களில் “ஜல யாத்திரை” சென்றுகொண்டிருக்கும் போது அவர் கூறியது நினைவுக்கு வருகிறது: “கடவுள் நிறைய மழையைக் கொடுத்துத் தமிழ்நாட்டு மக்களைக் கெடுத்துவைத்துள்ளார்.” காரணம், தமிழ் நாட்டில் சராசரி ஆண்டு மழையளவு 1,000 மி.மீ.!

இவ்வளவு சிக்கல்களுள்ள ஒரு திட்டம் எப்படிப் பாமர மக்களின் மனங்களைக் கவர்ந்தது? மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் வாதங்கள் / நம்பிக்கைகள் இப்படி இருக்கின்றன:

“இயற்கை தன் வளங்களைச் சரியாகப் பகிர்ந்தளிக்கத் தவறிவிட்டது. அறிவாற்றல் பெற்ற நாமே அதைச் சரி செய்ய வேண்டும்.”

“அப்துல் கலாமே சொல்லிவிட்டார். பிறகு என்ன?”

“நவீன விஞ்ஞானம், தொழில்நுட்பம் எப்போதுமே நம்மைக் கைவிடாது.”

மரவளங்களை அழித்துக் காட்டு வெள்ளங்களையும் கடும் வறட்சியையும் உண்டுபண்ணிக் கொண்டிருப்பது நாம்தான். இயற்கை அல்ல. உலகப் பொறியாளர்களெல்லாம் வியந்து பாராட்டிய ஆயிரக்கணக்கான பண்டைக் காலத்து ஏரிகளை மூடிவிட்டு, குறைந்த மழைபெறும் இடங்களுக்கே உரிய கம்பு, திணை போன்ற சத்துள்ள உணவுப்பயிர்களை அழித்துவிட்டோம். பன்மடங்கு நீர் உறிஞ்சும் பயிர்களை இரசாயனம் கலந்து பயிர்செய்து, நீர் நிலைகளை மாசுபடுத்திவிட்டோம். அப்துல் கலாம் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் சாதனை படைத்திருக்கலாம். ஆனால் தண்ணீர்த் தொழில்நுட்பத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

நவீன விஞ்ஞானம் ‘பசுமைப் புரட்சி’யை நம் நாட்டில் பஞ்சப் பிரச்சினைக்குத் தீர்வாக அளித்தது; இப்போது ஏழ்மைக்கு அதுவே காரணமாக மாறி நம்மை ஏமாற்றிவிட்டது; நம் நீர், நில வளங்களை வீணடித்துவிட்டது; நம் விவசாயிகளைக் கடன் தொல்லையினால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்குத் தள்ளியுள்ளது. இரசாயனப் பூச்சிகொல்லி மருந்துகள், புற்று நோய் அதிகரித்துக்கொண்டே போவதற்குக் காரணமாகிவிட்டன. இப்படி ‘நீலப் புரட்சி’, ‘வெண்மைப் புரட்சி’ என நவீன அறிவியல் வண்ணமயமாக நமக்குப் பரிசளித்த புரட்சிகள் அனைத்தும் நம் நம்பிக்கையைப் பெருமளவில் மோசம் செய்துள்ளன.

நெல் ஆலை முதலாளிகள், உமியை அகற்றித் தவிட்டை நீக்கி, வெள்ளை வெளேரென்று மெருகேற்றிய அரிசியை ஒருபுறம் விற்றுக் காசாக்கி, மறுபுறம் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விட்டமின் தயாரிப்பதற்காகத் தவிட்டை அதிக விலைக்கு விற்கின்றனர். அந்த வெள்ளை அரிசியைத் தரம் வாய்ந்ததென்று எண்ணி அதிக விலைக்கு வாங்கி உண்டு, மறுபுறம் விட்டமின் மாத்திரைகளை உண்கிறோம். நதிநீர் இணைப்புத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புக்கிடைக்கும் என்று சொல்வது இதைப் போலத்தான் உள்ளது. இதுபோன்ற ‘வளர்ச்சி’த் திட்டங்களின் அகதிகளாக நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து சேரிகளில் ஏழ்மையில் வாழும் குழந்தைகளைப் பாடுபட்டுப் பண உதவிசெய்து பொறியாளர்களாக்கப் படிக்க வைக்கிறோம். பிறகு இதுபோன்ற திட்டங்கள் தீட்டி, வேலைவாய்ப்பு என்ற பெயரில் அவர்களை அதனுள் தள்ளி, மேலும் மேலும் அகதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது இந்த வன்முறை. சற்றே சிந்தித்துப் பார்ப்போம்.

1 comment:

Unknown said...

Very nice research mam.. I can feel the knowledge depth and immense care for humanity in this article.
Nation definitely needs such an advisory before implementing any such long term plans