Friday, September 6, 2013

சலனமற்றிருக்கும் குளத்தில் கல்லெறியாதீர்கள்!


Translated by Selva Jeyabharathi / தமிழாக்கம்: செல்வா ஜெயபாரதி 

***

குழந்தைகள் தங்களின் இயல்பான துறுதுறுப்பும் செயல்களும் இல்லாமல் ஒருவித அமைதியான மனநிலையில் சும்மா இருந்தால் நம்மில் பெரும்பாலானவர்களுகு அது அசௌகரியத்தை தரும். ஏனெனில் எந்தச்செயலிலும் ஈடுபாடாமல் சும்மா அமைதியாக இருப்பதென்பது வளர்ந்தவர்களாகிய நமக்கே அசௌகரியம்தரும் காரியம்தான். அதீத உற்பத்தி மற்றும் செயல்களை முதன்மையாக கொண்டு இயங்கும் இன்றைய நவீன காலகட்டத்தில் அமைதியாக இருப்பதென்பது சோம்பேறித்தனமென சுட்டப்படும். செயலற்ற இந்த பொழுதுகளில் ஒருவருள் உண்மையில் என்ன நிகழ்கிறதென்பது மிகவும் முக்கியமானது.

இதைப் வகுப்பறையில் 'அமைதியாக அமர்ந்திருத்தல்" என்பதுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. வகுப்பறைகளில் பொதுவாக குழந்தைகள் ஒருவித பயத்துடனும் பதற்றத்துடனுமே இருக்கிறார்கள். ஆசிரியர் எந்த நேரத்திலும் தன்னை எழுப்பி கேள்வி கேட்டுவிடுவாரோ என்ற ஓயாத பதற்றம் குழந்தைகளிடம் உண்டு. பயமும் பதற்றமும் உள்ள மனது மிகவும் இரைச்சலானது; மன அமைதிக்கு முற்றிலும் எதிர்திசையில் இயங்கக்கூடியது. நான் இங்கு குறிப்பிடுவது வேறு. எந்த வெளிப்புறச் செயலிலும் ஈடுபடாமல், எந்த பயமும் இல்லாமல் தன்னியல்பாக அமைதியான மனநிலைக்குள் செல்லும்போது நம் ஐம்புலன்களின் முழு ஒத்துழைப்புடன் நம்மை நாம் கவனிக்கிறோம். 

பாடத்திட்டங்கள், அட்டவணைகள், மதிப்பெண்தரப்படுத்தல்போன்ற எதுவும் இல்லாமல் இயற்கைக் கல்வி முறையில் தனித்து விடப்படும் குழந்தைகள் தங்கள் மனம் ஆர்வங்கொள்ளும் விஷயங்களில் சிந்தனையை செலுத்தி கற்றுக்கொள்கிறார்கள். ஈஷா கற்றுக்கொள்ளும் முறையும் இதுதான். அவளாக தன் மனம் உந்திச்செல்லும் விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வாள். துறுதுறுப்பாக இருப்பதும் நிறைய பேசுவதும் அவளது இயல்புகள். ஆனாலும் சில சமயங்களில் ஒன்றும் செய்யாமல் அமைதியாக சும்மா இருப்பதற்கு விரும்புவாள். ‘இன்று நாம் வெளியே எங்கும் செல்லவேண்டாம், யாரையும் சந்திக்க வேண்டாம், வீட்டிலேயே சும்மா இருப்போம்’ என்று சொல்லுவாள். இப்படிச்சொல்லும் நாட்களில் அவளுக்கு உடல்நலக்குறைவோ வெறுமையோ இருக்கிறதென்று அர்த்தமில்லை. எப்போதும் போலத்தான் இருப்பாள். ஆனாலும் ஏதோ ஓர் அமைதி தேவையாய் இருக்கிறது அவளுக்கு. அவள் இப்படி வேண்டிக்கொள்ளும் நாட்கள் எனக்கும் சிறப்பான நாட்களாக அமையும். ஏனெனில் அவள் அந்தநாளை எப்படிச் செலவிடுகிறாள், ‘எதுவுமே செய்யாமல்’ என்னதான் செய்கிறாள் என்று கவனிக்க ஆவலாக இருப்பேன். 

இந்த செயல்களற்ற நாட்களில்இஷா வெறுமனே விளையாட்டு பொருட்களைப்  பார்த்துக் கொண்டிருப்பாள். வண்ணப்பென்சில்கொண்டு எதையாவது வரைவாள். அவ்வபோது உரையாடுவாள். அவளது கேள்விகள் எளிமையாக ஆனால் ஆழமானவையாக இருக்கும். இந்த நாட்களில் அவள் நடந்துகொள்ளும் விதம் பெரியவர்களின் சுபாவத்தை ஒத்திருக்கும். குறும்புத்தனங்கள், சேட்டைகள் அதிகமிருக்காது. மனதினுள் அமிழ்ந்த நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருப்பதற்காகவே அமைந்த நாட்களைப் போலவே தோன்றும். இந்த அமைதியும் தன்னுள் அமிழ்ந்து கொள்வதும் மிகச்சிறியளவில் அன்றாடம் நிகழ்வதுதான். எதையாவது தேடி, அறிந்துகொண்டு, குழந்தைகளுடன் விளையாடி களைத்துபோய் இரவு வீட்டிற்கு வந்ததும் அன்றைய நாட்களுக்கான  விஷயங்களைத் தன்வயப்படுத்திக்கொள்வாள். ஈஷாவைக் கவனித்ததின் வழியாகவும், என்னுடைய தனிப்பட்ட அனுபவங்கள் வழியாகவும் வெட்டேத்தியான இந்த தனிமையில் உண்மையில் என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றி என்னுடைய அவதானிப்புகள் இவை.

1. குழந்தைகள் தாங்கள் எதிர்கொண்ட விஷயங்களைப்கொண்டு உலகை தகவமைத்துக்கொள்ள முயல்கிறார்கள்:

குழந்தைகள் தாங்கள் கேட்ட, பார்த்த விஷயங்கள் சார்ந்து எழும் சந்தேகங்களை சின்ன சின்ன கேள்விகளாகக் கேட்கிறார்கள். 'சிங்கம் ஏன் மானை சாப்பிடுகிறது? ஓணான் ஏன் பூச்சிகளைப் பிடித்து உண்ணுகிறது?' போன்ற கேள்விகள் அவை. எங்களின் முன்முடிவுகளை ஈஷாவின் மேல் திணிக்கக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். எங்கள் பதில்கள் எப்போதும் ‘நாங்கள் இவ்வாறு நினைக்கிறோம், நீ என்ன நினைக்கிறாய்?’ என்பதாகவே இருக்கும். ஆனால் எல்லா நேரங்களிலும் முன்முடிவுகளற்று சமநிலையுடன் பதிலளிப்பது கடினமானதாகவே இருக்கிறது. சமநிலை குலைந்து முன்முடிவுகளுடன் பதிலளிக்கும் சந்தர்ப்பங்கள் நிகழ்ந்துவிடத்தான் செய்கிறது. நாங்கள் ஈஷாவிடம் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களை, அவளின் மனவார்ப்புக்கேற்ப தகவமைத்துக்கொண்டு புரிந்துகொள்கிறாள். தகவமைத்துக் கொள்வதற்கும் இணைத்துப் புரிந்துகொள்வதற்கும் குழந்தைகளின் மனம் தன்னியல்பாக தனிமையான அமைதிக்குள் செல்லவேண்டியிருக்கிறது. தனிமையான அமைதி என்று சொல்லும்போது அது ஏதோ அட்டவணை இட்டுக்கொண்டு ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு மணிநேரம் செய்யும் செயல்போல் எடுத்துக்கொள்ளக்கூடாது. தன்னியல்பாக செய்யவேண்டிய ஒன்று இது. 

ஈஷா அவள் புரிந்துகொண்ட, கடந்து வந்த விஷயங்களைப் பற்றி பேசுவாள். "இது ஏன் இப்படி நடந்ததென்று தெரியுமா? ‘இப்படித்தான்’ என்று அவள் புரிந்துகொண்டததை பதிலாக சொல்லுவாள். மேலும் இரண்டுநாள் கழித்து அதே விஷயத்தைப் பற்றி தன்னுடைய புதிய புரிதலை சொல்லுவாள். "நான் சின்னபெண்ணாக இருந்தபோது என்ன நினைத்தேன் தெரியுமா? (இரண்டு நாளில் பெரியவர்களாக வளர்ந்துவிடும் ரசவாதம் அறிந்தவர்கள் குழந்தைகள்!) ஆனால் இப்போது நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா?" என்று தனது புதிய புரிதலை விளக்குவாள். சிலசமயம் நாங்கள் கொஞ்சம் சிக்கலான கேள்விகளைக் கேட்டால் சிறிது நிதானித்து குத்துமதிப்பாக பதில் சொல்லுவாள். தெரியவில்லை என்றால் ஒப்புக்கொள்ளவும் அதுசார்ந்து தன் தேடலைத் தொடங்கவும் முயல்வாள். 

2. குழந்தைகள் தங்களைக் காயப்படுத்திய வலிதரும் சம்பவங்களை தனிமையில் சிந்திப்பதன்மூலம் அந்த வேதனையை ஆற்றுப்படுத்தவும், அதிலிருந்து வெளிவரவும் தெரிந்துகொள்கிறார்கள்: 

குழந்தைகள் இயல்பிலேயே மிகமிக மென்மையானவர்கள். பலவீனமானவர்களும்கூட. தாங்கள் பார்க்கும் கேட்கும் விஷயங்களால், புறஉலகின் தடித்தனத்தால், பெரியவர்களிடம் அவர்கள் உணரும் போலித்தனத்தால், அவர்கள் மீது திணிக்கப்படும் கணக்கில்லாத தகவல்களால் மிரட்சியான மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தாங்களாகவே தனிமையான மனநிலைக்கு செல்லும்போது குழந்தைகளால் தாங்கள் உணர்ந்த மிரட்சியை, வேதனையை பிறருடைய உதவியின்றி ஆற்றுப்படுத்திக்கொண்டு கடந்துவர முடிகிறது. 

ஒரு பேருந்துப் பயணத்தின்போது கிட்டத்தட்ட ஒருமணிநேரம் எதுவுமே பேசமால் வந்த ஈஷா எதோ தோன்றியவளாக ‘பாப்பாவை வைத்துக்கொண்டிருந்த அந்த அக்கா ஏன் பணம் கேட்டாங்க?’ என்றாள். சிக்னலில் கைக்குழந்தையுடன் யாசித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணைப் பற்றிய அவளுடைய கேள்வி இது. "ஏன் என்னை எல்லோரும் அழக்கூடாதென்று சொல்கிறார்கள்? அழுகை வந்தால் நான் வேறு என்னதான் செய்வது?" அவளின் இந்த கேள்விகள் மூலம் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. சில விஷயங்கள் அவளின் மனதை தொந்தரவு செய்கிறது. தனிமையான மனநிலைக்கு செல்வதன் மூலம் அவற்றைப்  புரந்துகொள்ள முயற்சிக்கிறாள்.

தனிமையான மனநிலைக்குச் செல்லும் குழந்தைகளைப் பற்றி ஜான் ஹோல்ட் சில அவதானிப்புகளைச் சொல்கிறார். குழந்தைகள் தங்கள் மனதை சலனப்படுத்தும் தொந்தரவு செய்யும் விஷயங்களை மீண்டும் மீண்டும் மனத்திரையில் பிரதியெடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தங்களைத் தொந்தரவு செய்த அனுபவத்திலிருந்து வெளிவரவும், அதே நிகழ்வை ஒரு பார்வையாளனின் மனநிலையிலிருந்து அணுகவும் கற்றுக்கொள்கிறார்கள். மெல்ல தங்கள் மனதை காயப்படுத்திய நிகழ்விலிருந்து வெளிவருகிறார்கள். அந்தத் துயரமும் நிகழ்வும் கதையாகவும் கதாப்பாத்திரமாகவும் ஆகும்போது விருப்பம்போல் அதே நிகழ்வை மாற்றி அமைத்துக்கொள்ளவும் அவர்களால் முடிகிறது. ஆரோக்கியமான பயமில்லாத மனதால்தான் கடந்துவந்த விஷயங்களை மறுகட்டமைத்துக்கொண்டு, அவற்றிக்கு  பயமற்ற நுண்ணர்வுடன் எதிர்வினையாற்ற முடியும். இதைத்தான் கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுதல் என்று சொல்கிறோம். குழந்தைகள் தனித்துவிடப்படும்போது இதை வெகு இலகுவாக செய்கிறார்கள் என்கிறார் ஜான் ஹோல்ட். இது பெரியவர்களுக்கும் கூடப்பொருந்தும்.

தாங்கள் அறிந்து கொண்டவற்றையும் தங்களை பாதித்த விஷயங்களைப் பற்றியும் மனதில் ஆராய்ந்து தெளியும் போதுதான் குழந்தைகளால் எந்தச் சுமையுமின்றி புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும் அனுபவங்களை எதிர்கொள்ளவும் முடியும். இயற்கை வைத்தியத்தில் வயிற்றில் செரிமானமாகாத உணவிருக்கும்போது அதை செரிக்கவைக்க விரதமிருப்பார்கள். இந்த முறையில் உணவு செரிமானமாவதுடன் உடல்புத்துணர்ச்சி பெற்று புதிய உணவை உட்கொள்ளவதற்க்கும் தயாராகிவிடும். என்னதான் சத்துள்ள நல்ல உணவாக இருந்தாலும், அளவுக்கு மீறி உணவை தொடர்ந்து உண்டுகொண்டே  இருந்தோமேயானால் நம் உடலால் அதன் நல்ல சத்துக்களைக்கூட பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விடும். அதுபோல தொடர்ந்து தகவல்களாக குழந்தைகளின் மூளையில் திணித்துகொண்டே இருந்தோமென்றால், அத்தகவல்கள் உள்வாங்கப்பட்டு அறிவாகவும் சிந்தனையாகவும் பரிணமிக்காமல் பயனற்றுப் போய்விடும்.  

பயமில்லாத தெளிவான மனதால்தான் எதையும் முழுமையாக உள்வாங்கமுடியும். மனதின் இறைச்சல்களை சஞ்சலங்களை வலிகளை தொடர்ந்து கவனித்து களைந்தால்தான் தெளிவான பயமில்லாத மனம் சாத்தியம். அத்தகைய மனம்கொண்ட குழந்தையால் வாழ்க்கையின் சகல கூறுகளுடனும் ஒரு இணைப்பை பேணிக்கொண்டு சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். இனிமேல் ஒரு குழந்தை அமைதியாக இருப்பதைக் கண்டால், தள்ளி நின்று கவனியுங்கள், ஒருபோதும் அமைதியை குலைத்து உரையாடலைத் தொடங்காதீர்கள். எதையாவது செய்யக் கட்டாயப்படுத்தாதீர்கள், பரவசமூட்டும் எதையாவது செய்து குழந்தையை திசைதிருப்ப முயலாதீர்கள். மாறாக உங்கள் மனதிலிருக்கும் இரைச்சலை கவனிக்கத் தொடங்குங்கள். சலனமற்றிருக்கும் குளத்தில் கல்லெறியாதீர்கள். அமர்ந்து அதை ரசிக்கப் பழகுங்கள். தெளிந்த நீரில்தான் முகத்தின் (மனதின்) பிரதிபலிப்பைக் காணமுடியும்.

No comments: