Friday, July 12, 2013

பெரியசாமி தூரன்



பெரியசாமி தூரனை கர்நாடக சங்கீத கீர்த்தனைகள் இயற்றியவராகத்தான் எனக்கு அறிமுகம்.  கணநாதனே (சாரங்கா), முருகா முருகா (சாவேரி), கலியுக வரதன் (பிருந்தாவன சாரங்கா) அவரது பிரபலமான கீர்த்தனைகள். நேற்றுதான் அவர் குழந்தை மனதத்துவம், மாற்றுக் கல்வி, குழந்தை வளர்ப்பு பற்றி புரட்சியான நூல்களை எழுதியுள்ளார் என அறிந்தேன். அந்த நூல்களின் பட்டியலும், அவற்றின் இணைப்புகளும் கீழே. 


இந்த நூலில் குழந்தைகளின் சுயேச்சையையும், சிந்தனா சக்தியையும், படைப்புத் திறனையும், இயல்பூக்கத்தையும் தடை செய்யாது ஊக்கப்படுத்துவதன் அவசியத்தையும் முறையையும் பற்றி மிக ஆழமாக, அழகாக, எளிமையாக விளக்கியுள்ளார். 'வளர விடுக', 'பேச்சும் பாட்டும்', 'ஓடி விளையாடு பாப்பா', 'எண்ணித் துணியும் பேராற்றல்', 'பயப்படுத்தலாமா?', 'குழந்தை சித்திரம்', 'அறிவிலே ஆசை' ஆகிய அத்தியாயங்கள் அத்தனை அற்புதம். தமிழில் இத்தனை புரட்சிகரமான எளிமையான நூல் ஒன்றைக் கண்டெடுத்ததில் எனக்குப் பேரின்பம்! 

***
சில பகுதிகள் 

"ஒரு அழகான மெல்லிய பூச்செடி நன்கு வளர்வதற்கு நிலத்தை வேண்டியவாறு பண்படுத்தி மற்ற சௌகரியங்களையும் செய்துவிட்டால் அது தானாகவே வளர்ந்து அதன் எழிலும் நறுமணமுமாகிய பயனை உலகத்திற்குத் தருகின்றது. அதுபோலவேதான் பூங்குழந்தையும். அதன் பூரண வளர்ச்சிக்கு அன்பு வேண்டும். அனுதாபம் வேண்டும். அவற்றைவிட முக்கியமாக சுயேச்சை வேண்டும்."  

"பெரும்பாலோர் சமூகத்தை அனுசரித்தே நடந்து கொள்வார்கள். ஆனால் உறுதியான எண்ணங்களுடைய சிலர் சமூகத்தைத் தமது எண்ணங்களுக்கேற்ப மாற்றி அமைக்க முயலுகிறார்கள். அவர்களுடைய எண்ணங்கள் உயர்ந்தவையாக இருந்தால், அவை சமூகத்தின் முன்னேற்றத்துக்கே காரணமாய் விடுகின்றன. அப்படிப்பட்ட சிந்தனையாளர்களால் உலகம் நன்மையடைகின்றது. சிந்தனா சக்தியை இளம்பிராயம் முதற்கொண்டே தடை செய்யாது மலரும்படி செய்வதாலேயே இது சாத்தியமாகின்றது." 

"குழந்தையை நன்கு வளர்க்க ஆவல் கொண்டிருக்கும் பொற்றோர்கள் தங்கள் நடத்தையையே, ஏன் வாழ்க்கையையே அதற்கேற்றபடி மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்."

No comments: